cuppiramaNiya pAratiyAr pATalkaL -tEciya kItangkaL(in unicode format) cuppiramaNiya pAratiyAr pATalkaL (tEciya kItangkaL) (in tamil script, Unicode/UTF-8 format) சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் 1. தேசிய கீதங்கள் Acknowledgment: Our Sincere thanks go to Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland for his assistance in the preparation of this work. This webpage presents tEciya kItangkaL of pArati in Tamil script in Unicode encoding. © Project Madurai, 1998-2021. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் 1. தேசிய கீதங்கள் 1. வந்தே மாதரம் ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத் தராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும் முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு போயின நாட்களுக் கினிமனம் நாணித் தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத் தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) ----- 2. ஜய வந்தே மாதரம் ராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி பல்லவி வந்தே மாதரம் - ஜய வந்தே மாதரம். சரணங்கள் ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே) ஆரிய பூமியில் நாரிய ரும் நர சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே) நொந்தே போயினும் வெந்தே மாயினும் நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே) ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் சென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே) ------ 3. நாட்டு வணக்கம் ராகம் - காம்போதி தாளம் - ஆதி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன் வாயுற வாழ்த்தேனோ? - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும் இந்நாடே - எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே - அவர் கன்னிய ராகி நிலவினி லாடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல் போந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே - அவர் தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித் தழுவிய திந்நாடே - மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும் இந்நாடே - இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? ----- 4. பாரத நாடு ராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி பல்லவி பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு. சரணங்கள் ஞானத்தி லேபர மோனத்திலே - உயர் மானத்தி லேஅன்ன தானத்திலே கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில் ஈரத்தி லேஉப காரத்திலே சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு தருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப் பன்மையி லேமறத் தன்மையிலே பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின் புகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத் தண்மையி லேமதி நுண்மையிலே உண்மையி லேதவ றாத புலவர் உணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) யாகத்தி லேதவ வேகத்திலே - தனி யோகத்தி லேபல போகத்திலே ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம் அருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல் காற்றினி லேமலைப் பேற்றினிலே ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி இனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்) தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே தேட்டத்தி லேஅடங் காத நதியின் சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)) ---- 5. பாரத தேசம் ராகம் - புன்னாகவராளி பல்லவி பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார். சரணங்கள் வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத) சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத) வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம், எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத) முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே, மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே, நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத) சிந்து நதியின்மிசை நிலவினி லே சேர நன்னாட்டிளம் பெண்களுட னே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத) கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத) காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம் ராசபுத் தானத்து வீரர் தமக்கு நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத) பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம் கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத) ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம் உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத) குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம் கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம் நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம் ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத) மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம் வானையளப் போம்கடல் மீனையளப்போம் சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம் சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத) காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம் கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம் ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம் உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத) சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம் நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத) 6. எங்கள் நாடு ராகம் - பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையே       மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே       இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே       பார் மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே       போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத வீரர் மலிந்தநன் னாடு       மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு       நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் னாடு       புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே       பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே. இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்       ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்       தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்       கதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும் உன்னத ஆரிய நாடெங்கள் நாடே       ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே. ----------- 7. ஜயபாரத சிறந்து நின்ற சிந்தை யோடு       தேயம் நூறு வென்றிவள் மறந்த விர்ந்த் நாடர் வந்து       வாழி சொன்ன போழ்தினும் இறந்து மாண்பு தீர மிக்க       ஏழ்மை கொண்ட போழ்தினும் அறந்த விர்க்கி லாது நிற்கும்       அன்னை வெற்றி கொள்கவே! நூறு கோடி நூல்கள் செய்து       நூறு தேய வாணர்கள் தேறும் உண்மை கொள்ள இங்கு       தேடி வந்த நாளினும் மாறு கொண்டு கல்லி தேய       வண்ணி தீர்ந்த நாளினும் ஈறு நிற்கும் உண்மை யொன்று       இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே! வில்லர் வாழ்வு குன்றி ஓய       வீர வாளும் மாயவே வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்       மெய்மை நூல்கள் தேயவும் சொல்லும் இவ் வனைத்தும் வேறு       சூழ நன்மை யுந்தர வல்ல நூல் கெடாது காப்பள்       வாழி அன்னை வாழியே! தேவ ருண்ணும் நன்ம ருந்து       சேர்ந்த கும்பம் என்னவும் மேவுவார் கடற்கண் உள்ள       வெள்ள நீரை ஒப்பவும் பாவ நெஞ்சினோர் நிதம்       பறித்தல் செய்வ ராயினும் ஓவி லாதசெல்வம் இன்னும்       ஓங்கும் அன்னை வாழ்கவே! இதந்தரும் தொழில்கள் செய்து       இரும்பு விக்கு நல்கினள் பதந்தரற் குரிய வாய       பன்ம தங்கள் நாட்டினள் விதம்பெறும்பல் நாடி னர்க்கு       வேறொ ருண்மை தோற்றவே சுதந்திரத்தி லாசை இன்று       தோற்றி னாள்மன் வாழ்கவே! ----------- 8. பாரத மாதா தான தனந்தன தான தனந்தன தானனத் தானா னே. முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்தவில் யாருடை வில்? - எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில். இந்திர சித்தன் இரண்டு துண்டாக எடுத்தவில் யாருடைய வில்? - எங்கள் மந்திரத் தெய்வம் பாரத ராணி, வயிரவி தன்னுடைய வில். ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள் உலகின்பக் கேணி என்றே - மிக நன்று பல்வேதம் வரைந்தகை பாரத நாயகி தன்திருக் கை. சித்த மயமிவ் உலகம் உறுதி நம் சித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம் அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல் ஆரிய ராணியின் சொல். சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத் தட்டி விளையாடி - நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை. காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது கல்லொத்த தோள்எவர் தோள்? - எம்மை ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள் ஆரிய தேவியின் தோள். சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் தந்த தெவர் கொடைக்கை? - சுவைப் பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும் பாரத ராணியின் கை. போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை புகன்ற தெவருடை வாய்? - பகை தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத தேவிமலர் திரு வாய். தந்தை இனிதுறந் தான் அர சாட்சியும் தையலர் தம்முறவும் - இனி இந்த உலகில் விரும்புகி லேன் என்றது எம் அனை செய்த உள்ளம். அன்பு சிவம்உல கத்துயர் யாவையும் அன்பினிற் போகும் என்றே - இங்கு முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன் மொழி எங்கள் அன்னை மொழி. மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி - தன் மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது வல்ல நம் அன்னை மதி. தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம் செய்த தெவர் கவிதை? - அயன் செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத தேவி அருட் கவிதை. ----- 9. எங்கள் தாய் (காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு) தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம் எங்கள் தாய். யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு மேயங்கள் தாய் - இந்தப் பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடு வாள்எங்கள் தாய். முப்பதுகோடி முகமுடை யாள்உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள். நாவினில் வேத முடையவள் கையில் நலந்திகழ் வாளுடை யாள் - தனை மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை வீட்டிடு தோளுடையாள். அறுபது கோடி தடக்கைக ளாலும் அறங்கள் நடத்துவள் தாய் - தனைச் செறுவது நாடி வருபவ ரைத்துகள் செய்து கிடத்துவள் தாய். பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் - எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந் துர்க்கை யனையவள் தாய். கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள்எங்கள் தாய் - கையில் ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும் ஒருவனை யுந்தொழு வாள். யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும் ஒன்றென நன்றறி வாள் - உயர் போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும் பொற்குவை தானுடையாள். நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரி வாள்எங்கள் தாய் - அவர் அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் ஆனந்தக் கூத்தி டுவாள். வெண்மை வளரிம யாசலன் தந்த விறன்மக ளாம்எங்கள் தாய் - அவன் திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ் சீருறு வாள்எங்கள் தாய். ----- 10. வெறி கொண்ட தாய் ராகம் - ஆபோகி தாளம் - ரூபகம் பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை காய்தழல் ஏந்திய பித்தன் - தனைக் காதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்) இன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து எற்றும் அலைத்திரள் வெள்ளம் தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத் தாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்) தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில் தெய்வீக நன்மணம் வீசும் தேஞ்சொரி மாமலர் சூடி - மது தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்) வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை வேல்கையிற் பற்றிக் குதிப்பாள் ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந் தோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்) பாரதப் போரெனில் எளிதோ? - விறற் பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள் மாரதர் கோடிவந் தாலும் - கணம் மாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்) ----- 11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,       புன்மை யிருட்கணம் போயின யாவும், எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி       எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்       தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே       வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,       பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம் வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்!       வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்! தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்       சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார், அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!       ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே! பருதியின் பேரொளி வானிடைக் கண்டோ ம்,       பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம், கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே       கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம் சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி       சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே! நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!       நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே! நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்       நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ? பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்       பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே! என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்       ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே? இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?       இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே! மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?       மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ? குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?       கோமகளே! பெரும் பாரதர்க் கரசே! விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி       வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய் இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!       ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே! ------ 12. பாரத மாதா நவரத்தின மாலை (இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன) (காப்பு) வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார் நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் சிவரத்தன மைந்தன் திறம். (வெண்பா) திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி அறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள் எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன் கண்ணொத்த பேருரைத்தக் கால். (கட்டளை கலித்துறை) காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற் றோலிமிட்டோ டி மறைந்தொழி வான், பகை யொன்றுளதோ? நீலக் கடலொத்fத கோலத்தி ளாள்மூன்று நேத்திரத்தாள் காலக் கடலுக்கோf பாலமிட் டாள்அன்னை காற்படினே. (எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்) அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்       ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்       பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள் இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்       என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்? மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற       விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. (ஆசிரியப்பா) வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! கற்றவ ராலே உலகுகாப் புற்றது உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம் இற்றைநாள் வரையினும் அறமிலா மறவர் குற்றமே தமது மகுடமாக் கொண்டோ ர், மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார் பற்றை அரசர் பழிபடு படையுடன் சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார் இற்றைநாள் பாரி லுள்ள பலநாட் டினர்க்கும் பாரத நாடு புதுநெறி பழக்கல் உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும் கவீந்திரனாகிய ரவீந்திர நாதன் சொற்றது கேளீர்! புவிமிசை யின்று மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன் தர்மமே உருவமாம் மோஹன தாஸ் கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான் அத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும் வெற்றி தருமென வேதம் சொன்னதை முற்றும் பேண முற்பட்டு நின்றார் பாரத மக்கள் இதனால் படைஞர் தம் செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே (வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்! ) (தரவு கொச்சக் கலிப்பா) ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள் ஓதுமினோ வேதங்கள்! ஓங்குமினோ! ஓங்குமினோ! தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோ ம் வேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே. (வஞ்சி விருத்தம்) திண்ணங் காணீர்! பச்சை வண்ணன் பாதத் தாணை எண்ணம் கெடுதல் வேண்டா! திண்ணம் விடுதலை திண்ணம். (கலிப்பா) விடுத லைபெறு வீர்வரை வாநீர்       வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும் கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்       கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்? சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை       சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை எடுமி னோஅறப் போரினை என்றான்       எங்கோ மேதகம் ஏந்திய காந்தி! (அறுசீர் விருத்தம்) காந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி போந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும் மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார் காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே (எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்) கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய்       பாரத தேவியே கனல்கால் இணைவழி வால வாயமாஞ் சிங்க       முதுகினில் ஏறிவீற் றிருந்தே துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்       துயர்கெட விடுதலை யருளி மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்       கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.- ----- 13. பாரத தேவியின் திருத் தசாங்கம் நாமம் (காம்போதி) பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப் பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில் பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த பாரதமா தேவியெனப் பாடு. நாடு (வசந்தா) தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும் ஆரியநா டென்றே அறி. நகர் (மணிரங்கு) இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள் நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது தானென்ற காசித் தலம். ஆறு (சுருட்டி) வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத் தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும் வான்போந்த கங்கையென வாழ்த்து. மலை (கானடா) சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள் வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள் வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும் பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு. ஊர்தி (தன்யாசி) சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள் ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின் பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும் அரிமிசையே ஊர்வாள் அவள். படை (முகாரி) கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய் செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர் மேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம் திண்ணமுறு வான்குலிசம் தேறு. முரசு (செஞ்சுருட்டி) ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய் முத்திதரும் வேத முரசு. தார் (பிலகரி) வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர் தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள் பொற்றா மரைத்தார் புனைந்து. கொடி (கேதாரம்) கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும் மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார் நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி குன்றா வயிரக் கொடி. ------ 14. தாயின் மணிக்கொடி பாரீர் (பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்) தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு பல்லவி தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! சரணங்கள் ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்) இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்) கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்) அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்) செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்) கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்) பூதலம் முற்றிடும் வரையும் - அறப் போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்) பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்) சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்) ------ 15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை நொண்டிச் சிந்து நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த       நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்       அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த       மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்       துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) மந்திர வாதி என்பார் - சொன்ன       மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார், யந்திர சூனி யங்கள் - இன்னும்       எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே - ஜனம்       தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம அந்த அரசியலை - இவர்       அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு) சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்       சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார், துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு       தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார், அப்பால் எவனோ செல்வான் - அவன்       ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார், எப்போதும் கைகட்டுவார் - இவர்       யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த       நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு       கோடிஎன் றால் அது பெரிதா மோ? ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்       ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால் நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு       நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு) சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்       சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு       கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார், தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்       சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார, ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்       அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே - இதை       நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே, கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்       காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்       பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின் றாரே - இவர்       துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்       எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்       காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார், நண்ணிய பெருங்கலைகள் - பத்து       நாலாயிரங் கோடி நயந்துநின்ற புண்ணிய நாட்டினிலே - இவர்       பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு) ----- 16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் (போகின்ற பாரதத்தைச் சபித்தல்) வலிமையற்ற தோளினாய் போ போ போ       மார்பி லேஒடுங்கினாய் போ போ போ பொலிவி லாமுகத்தினாய் போ போ போ       பொறி யிழந்த விழியினாய் போ போ போ ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ       ஒளியி ழந்த மேனியாய் போ போ போ கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ       கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ இன்று பார தத்திடை நாய்போல       ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ       நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்       சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக       விழிம யங்கி நோக்குவாய் போ போ போ வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ       வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்       நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ மாறு பட்ட வாதமே ஐந்நூறு       வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்       சிறிய வீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ       தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று       நீட்டினால் வணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே       தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத்தால்       சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ. (வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்) ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா       உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா களிப டைத்த மொழியினாய் வா வா வா       கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா       சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா       ஏறு போல் நடையினாய் வா வா வா மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு       வேதமென்று போற்றுவாய் வா வா வா பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா       பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா       நோய்க ளற்ற உடலினாய் வா வா வா தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்       தேசமீது தோன்றுவாய் வா வா வா இளைய பார தத்தினாய் வா வா வா       எதிரிலா வலத்தினாய் வா வா வா ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்       உதய ஞாயி றொப்பவே வா வா வா களையி ழந்த நாட்டிலே முன்போலே       கலைசி றக்க வந்தனை வா வா வா விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்       விழியி னால் விளக்குவாய் வா வா வா வெற்றி கொண்ட கையினாய் வா வா வா       விநயம் நின்ற நாவினாய் வா வா வா முற்றி நின்ற வடிவினாய் வா வா வா       முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா       கருதிய தியற் றுவாய் வா வா வா ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்       ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா ----- 17. பாரத சமுதாயம் ராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம் பல்லவி பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க! பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத) அனுபல்லவி முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத) சரணங்கள் மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில் வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த வாழ்க்கை இனியுண்டோ ? இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு, கனியும் கிழங்கும் தானி யங்களும் கணக்கின்றித் தரு நாடு - இது கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத) இனியொரு விதிசெய் வோம் - அதை எந்த நாளும் காப்போம், தனியொரு வனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத) எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்றுரைத்தான் கண்ண பெருமான், எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத) எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள், எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத) ----- 18. ஜாதீய கீதம் (பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு) இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை! தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை! பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே) வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை! மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை! குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை! நல்குவை இன்பம், வரம்பல நல்குவை! முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும் அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும் திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்? அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி! பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே) நீயே வித்தை நீயே தருமம்! நீயே இதயம் நீயே மருமம்! உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே) தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே! சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே! ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே) ஒருபது படைகொளும் உமையவள் நீயே! கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ! வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே) போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை! இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை சாமள நிறத்தினை சரளமாந் தகையினை! இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை! தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே) ----- 19. ஜாதீய கீதம் (புதிய மொழிபெயர்ப்பு) நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே) தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே) கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும் கோடி கோடி புயத்துணை கொற்றமார் நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும், கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்? ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை, மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே) அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ. ஆலயந் தோறும் அணிபெற விளங்கும் தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே) பத்துப் படைகொளும் பார்வதி தேவியும் கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும் அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே) திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!       தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை மருவு செய்களின் நற்பயன் மல்குவை       வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை பெருகு மின்ப முடையை குறுநகை       பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை. இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,       எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே) ---- 2. தமிழ்நாடு 20. செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி - என மேவிய யாறு பலவோடத் - திரு மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் எத்தனையுண்டு புவிமீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) சிங்களம் புட்பகம் சாவக - மாதிய தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்) ------ 21. தமிழ்த்தாய் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் (தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன் நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச் சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன் காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! தந்தை அருள்வலி யாலும் - முன்பு சான்ற புலவர் தவ வலி யாலும் இந்தக் கணமட்டும் காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான். இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும, மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவ தில்லை - அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரத்தான் - ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ? சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! தந்தை அருள்வலி யாலும் - இன்று சார்ந்த புலவர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும் புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். ----- 22. தமிழ் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்       இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்       இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம்       பரவும்வகை செய்தல் வேண்டும். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,       வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,       உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்       வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்       தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்       தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும இறவாத புகழுடைய புதுநூல்கள்       தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்       சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்       அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்       வாக்கினிலே ஒளி யுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்       கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்       விழிபெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்       இங்கமரர் சிறப்புக் கண்டார். ----- 23. தமிழ்மொழி வாழ்த்து தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே! ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும் வாழிய வே! சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையக மே! தொல்லை வினை தரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி யே! வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே! ----- 24. தமிழச் சாதி. ..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், நாட்பட நாட்பட நாற்றமு சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும் தனது தருமமும் மாயாது என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச் சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? விதியே தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய். ஏனெனில் சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும் எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம் சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான் உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன், தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார், ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும், இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார், என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் எனினும் இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய். ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல், தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம், சாத்திர மின்றேற் சாதியில்லை, பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள் பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார், நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில் அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் - மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் - இவர்தம் உடலும் உள்ளமும் தன்வச மிலராய் நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும் பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும் உய்வகைக் குரிய வழிசில உளவாம். மற்றிவர் சாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய கொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) -- ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின் மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார் தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன், ஒரு சார் மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், தமிழச் சாதி தரணிமீ திராது பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும் நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர், உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர் தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை பல அவை நீங்கும் பான்மையை வல்ல என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர், என்பதே யாகும்; இஃதொரு சார்பாம் பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்) முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ? பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத் தவரோ? புராண மாக்கிய காலமோ? சைவரோ? வைணவ சமயத் தாரோ? இந்திரன் தானே தனிமுதற் கடவுள் என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக் காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்? நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் கலிதடை புரிவன் கலியின் வலியை வெல்லலா காதென விளிம்புகின் றனரால், நாசங் கூறும் எநாட்டு வயித்தியர் இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின் இடையே நம்மவர் எப்படி உய்வர்? விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருவி யிருக்கின் றாயடா? விதி மேலே நீ கூறிய விநாசப் புலவரை நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ்வீ ராயின், அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின் அறிவும் பெருமையும் - ... ...- ----- 25. வாழிய செந்தமிழ்! (ஆசிரியப்பா) வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ----- சுதந்தங்ரம் 26. சுதந்திரப் பெருமை ( தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு) வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவா ரோ? (வீர) புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும் பொய்யென்று கண்டாரேல் - அவர் இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு இச்சையுற் றிருப்பா ரோ? (வீர) பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் பெற்றியை அறிந்தாரேல் - மானம் துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பா ரோ? (வீர) மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் வாய்மையை உணர்ந்தாரேல் - அவர் ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்படு மாறுளதோ? (வீர) விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் மின்மினி கொள்வாரோ? கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர) மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை யிழப்பாரோ? கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியா ரோ? (வீர) வந்தே மாதரம் என்று வணங்கியபின் மாயத்தை வணங்கு வாரோ? வந்தே மாதரம் ஒன்றே தாரகம் என்பதை மறப்பாரோ? (வீர) ---- 27. சுதந்திரப் பயிர் தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ? ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ? அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?எந்தை சுயா தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே. ------ 28. சுதந்திர தாகம் ராகம் - கமாஸ் தாளம் - ஆதி என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?       என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?       என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!       ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?       மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ? பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?       பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?       தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ?       ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ!       வீர சிகாமணி! ஆரியர் கோனே! ----- 29. சுதந்திர தேவியின் துதி இதந்தரு மனையின் நீங்கி       இடர்மிகு சிறப்பட் டாலும் பதந்திரு இரண்டும் மாறிப்       பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல்       விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத்       தொழுதிடல் மறக்கி லேனே. நின்னருள் பெற்றி லாதார்       நிகரிலாச் செல்வ ரேனும், பன்னருங் கல்வி கேள்வி,       படைத்துயர்ந் திட்டா ரேனும், பின்னரும் எண்ணி லாத       பெருமையிற் சிறந்தா ரேனும், அன்னவர் வாழ்க்கை பாழாம்,       அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். தேவி! நின்னொளி பெறாத       தேயமோர் தேய மாமோ? ஆவியங் குண்டோ ? செம்மை       அறிவுண்டோ ? ஆக்க முண்டோ ? காவிய நூல்கள் ஞானக்       கலைகள் வேதங்க ளுண்டோ ? பாவிய ரன்றோ நிந்தன்       பாலனம் படைத்தி லாதார்? ஒழிவறு நோயிற் சாவார்,       ஊக்கமொன் றறிய மாட்டார், கழிவுறு மாக்க ளெல்லாம்       இகழ்ந்திடக் கடையில் நிற்பார் இழிவறு வாழ்க்கை தேரார்,       கனவிலும் இன்பங் காணார், அழிவுறு பெருமை நல்கும்       அன்னை! நின் அருள் பெறாதார். வேறு தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர் மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் தாவில் வானுல கென்னத் தகுவதே. அம்மை உன்றன் அருமை யறிகிலார் செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார், இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றிநினைப் புதுநிலை யெய்தினர், கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின் பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர். அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன் என்ன கூறிஇசைத்திட வல்லனே பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். பேர றத்தினைப் பேணுதல் வேலியே! சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய கார றுக்கக் கதித்திடு சோதியே! வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன். ---- 30. விடுதலை ராகம் - பிலகரிவிடுதலை விடுதலை! விடுதலை! விடுதலை! பறைய ருக்கும் இங்கு தீயர் புலைய ருக்கும் விடுதலை பரவ ரோடு குறவருக்கும் மறவ ருக்கும் விடுதலை! திறமை கொண்டதீமை யற்ற தொழில் புரங்ந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே வாழி கல்வி செல்வம் எய்தி மனம கிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச மானமாக வாழ்வமே! (விடுதலை) மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொ ளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையி னும்ந மக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்க ளோடு பெண்களும் சரிநி கர்ச மான மாக வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) ----- 31. சுதந்திரப் பள்ளு (பள்ளர் களியாட்டம்) ராகம் - வராளி தாளம் - ஆதி பல்லவி ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று (ஆடு) பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு) எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு) எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம். (ஆடு) நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப் பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு) ----- தேசிய இயக்கப் பாடல்கள் 32. சத்ரபதி சிவாஜி (தன் சைனியத்திற்குக் கூறியது) ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்! ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்! யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள் எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்! கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர். மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்! யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய! தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக! மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு! வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு! தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும் நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு! வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! பாரதப் பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! வானக முட்டும் இமயமால் வரையும் ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு! தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு! ஊனமொன்றறியா ஞானமெய் பூமி, வானவர் விழையும் மாட்சியார் தேயம்! பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்! தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர் பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும் ஞானமும் அறியா நவைபுரி பகைவர் வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்! ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார் கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார் எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர் கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர், பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர் திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர், பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர், வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர். மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்? மொக்குகள்தான் தோன்றி முடிவது போல மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம். தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய் ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில் அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன், புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன். மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர் யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக! படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்! சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க, நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக! தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க! ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன். ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்! வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்! மானமே பெரிதென மதிப்பவர் இருமின்! ஈனமே பொறாத இயல்பினர் இருமின்! தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்! மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்! ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்! சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்! தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்! பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்! உடலினைப் போற்றா உத்தமர் இருமின்! கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்! வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின் இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும் பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும் ராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்! வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்! பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும் (வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும் வானுறு தேவர் மணியுல கடைவோம், வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத் தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்! போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்! பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ? ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம் வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை! தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை! முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் காதலின் நண்பர் கலைதரு குரவரென்று இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த் தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர் ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்? வையகத் தரசும் வானக ஆட்சியும் போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன். மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது. வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது, ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும், வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன் சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன், எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன், சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி? எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த் தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான் வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால் அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய், உண்மையை அறியாய் உறவையே கருதிப் பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய் வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம். ஆரிய நீதிநீ அறிகிலை போலும்! பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும் பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக் குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் மறமே உருவுடை மாற்றலர் தம்மைச் சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன். விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும் ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர், நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர், செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர் சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார். ---- 33. கோக்கலே சாமியார் பாடல் (இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம் நான் கண்டுகொண்ட தருணம் என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது) களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம்       கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ?       வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ?       மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ? துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்       தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ? ----- 34. தொண்டு செய்யும் அடிமை (சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது) நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்கு மார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டு தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு சுதந்திர நினைவோடா? பண்டு கண்ட துண்டோ ? - அதற்கு பாத்திர மாவாயோ? (தொண்டு) ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய்! - கண்முன் நிற்கொ ணாது போடா! (தொண்டு) அச்சம் நீங்கி னாயோ? - அடிமை ஆண்மை தாங்கி னாயோ? பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை பேணு தலொழித் தாயோ? (தொண்டு) கப்ப லேறு வாயோ? - அடிமை கடலைத் தாண்டு வாயோ? குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு) ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை உடல்பில் வலிமை யுண்டோ ? வெற்று ரைபே சாதே! அடிமை! வீரியம் அறி வாயோ? (தொண்டு) சேர்ந்து வாழு வீரோ? - உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ? சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள் சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு) வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி வெருவலை ஒழித் தாயோ? உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம் உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு) நாடு காப்ப தற்கே - உனக்கு ஞானம் சிறது முண்டோ ? வீடு காக்கப் போடா! - அடிமை வேலை செய்யப் போடா! (தொண்டு) சேனை நடத்து வாயோ? - தொழும்புகள் செய்திட விரும்பு வாயோ? ஈன மான தொழிலே - உங்களுக்கு இசைவ தாகும் போடா! (தொண்டு) ----- 35. நம்ம ஜாதிக் கடுக்குமோ (புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்) "ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? நியாயந் தானோ? நீர் சொல்லும்?" என்ற வர்ணமெட்டு பல்லவி ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? செய்வது சரியோ? சொல்லும் கண்ணிகள் முன்னறி யாப் புது வழக்கம் நீர் மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது எந்நகரிலு மிது முழக்கம் - மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே) சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள் தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள் மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே) வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர் பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே) ------- 36. நாம் என்ன செய்வோம். ("நாம் என்ன செய்வோம்! புலையரே! - இந்தப் பூமியி லில்லாத புதுமையைக் கண்டோ ம்" என்றவர்ணமெட்டு) ராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம் பல்லவி நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப் பூமியிலில்லாத புதுமையைக் கண்டோ ம். (நாம்) சரணங்கள் திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு இபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்) தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார், பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார், பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்) பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்) சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார் சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் தாமெத் தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்) ------- 37. பாரத தேவியின் அடிமை (நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன் அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் பின்பற்றி எழுதியது) பல்லவி அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான் அன்னியர் தமக்கடிமை யல்லவே. சரணங்கள் மன்னிய புகழ் பாரத தேவி தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்) இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம் திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்) வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம் ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்) காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள் பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்) காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம் பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்) ----- 38. வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்று ராகம் - தாண்டகம் தாளம் - ஆதி நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய், கனல் மூட்டினாய், வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி) கூட்டம் கூடி வந்தே மாதரமென்று கோஷித்தாய், - எமை தூஷித்தாய், ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல் ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி) கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள் கூறினாய், - சட்டம் மீறினாய், ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி) அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் ஆக்கினாய், - புன்மை போக்கினாய், மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி) தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத் தூண்டினாய், - புகழ் வேண்டினாய், கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி) எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை ஏவினாய், - விதை தூவினாய், சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல் செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி) சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச் சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன் தடிப் பேசுவோ ருண்டோ ? சிறைக்குள்ளே தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி) ------ 39. தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோ ம் - இனி அஞ்சிடோ ம் எந்த நாட்டினும் இந்த அநீதிகள் ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ? வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம் எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல் ஈனமோ? - அவ மானமோ? பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? - உயிர் வெல்லமோ? நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? - பன்றிச் சேய்களோ? நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத் நீதமோ? - பிடி வாதமோ? பார தத்திடை அன்பு செலுத்துதல் பாபமோ? - மனஸ் தாபமோ? கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது குற்றமோ? - இதில் செற்றமோ? ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது ஓர்ந்திட்டோ ம் - நன்கு தேர்ந்திட்டோ ம் மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம் மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம். சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம் சாயுமோ? - ஜீவன் ஓயுமோ? இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ? ------ 40. நடிப்பு சுதேசிகள் (பழித்தறிவுறுத்தல்) கிளிக்கண்ணிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற பெண்களின் கூட்டமடீ! - கிளியே! பேசிப் பயனென் னடீ யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! மாங்கனி வீழ்வ துண்டோ! உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவா ரடீ! - கிளியே! செய்வ தறியா ரடீ! தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே! நம்புத லற்றா ரடீ! மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலு யிரைக் - கிளியே பேணி யிருந்தா ரடீ! தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே அஞ்சிக் கிடந்தா ரடீ! அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே ஊமைச் சனங்க ளடீ! ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா மாக்களுக் கோர் கணமும் - கிளியே வாழத் தகுதி யுண்டோ? மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் ஈனர்க் குலகந் தனில் - கிளியே! இருக்க நிலைமை யுண்டோ? சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் வந்தே மாதர மென்பார்! - கிளியே! மனத்தி லதனைக் கொள்ளார் பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் பழமை இருந்த நிலை! - கிளியே! பாமர ரேதறி வார்! நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! சிறுமை யடைவா ரடீ! சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! செம்மை மறந்தா ரடீ! பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! சோம்பிக் கிடப்பா ரடீ! தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் வாயைத் திறந்து சும்மா - கிளியே! வந்தே மாதர மென்பார்! ------- தேசீயத் தலைவர்கள் 41. மகாத்மா காந்தி பஞ்சகம் வாழ்க நீ எம்மான் வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க! அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம் குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப் படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்! முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! வேறு கொடியவெந் நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ? இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ? என்சொலிப் புகழ்வதிங் குனையே? விடிவிலாத் துன்பஞ் செயும் பராதீன வெம்பிணி யகற்றிடும் வண்ணம் படிமிசைப் புதிதாச் சாலவும் எளிதாம் படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்! தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும் பிறனுயிர் தன்னையும் கணித்தல் மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்களென் றுணர்தல் இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு இழிபடு போர், கொலை, தண்டம் பின்னியே கிடக்கும் அரசிய லதனில் பிணைத்திடத் துணிந்தனை பெருமான், பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய் அதனி லுந் திறன்பெரி துடைத்தாம் அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழி யென்று நீ அறிந்தாய் நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை! நெறியினால் இந்தியா விற்கு வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து வையகம் வாழ்கநல் லறத்தே! ----- 42. குரு கோவிந்தர் ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு விக்ரம நாண்டு வீரருக் கமுதாம் ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன் பாஞ்சா லத்துப் படர்தரு சிங்கக் குலத்தினை வகுத்த குருமணி யாவான். ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன், வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும் வீரர் நாயகன், மேதினி காத்த குருகோ விந்த சிங்கமாங் கோமகன், அவந்திருக் கட்டளை அறிந்துபல் திசயினும் பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும் நாடொறும் வந்து நண்ணுகின் றாரால், ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம் வீரர்கள் குருவின் விருப்பினைத் தெரிவான் கூடிவந் தெய்தினர் கொழும்பொழி லினங்களும், புன்னகைப் புனைந்த புதுமலர்த் தொகுதியும், பைந்நிறம் விரிந்த பழனக் காட்சியும், நல்வர வாகுக நம்மனோர் வரவு என்று ஆசிகள் கூரி ஆர்ப்பன போன்ற புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன் திருமொழி கேட்கச் செறிந்தனர் சீடர்கள் யாதவன் கூறும்? என்னெமக் கருளும் ? எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும் இன்புடைத் தாக்கும்? எனப்பல கருதி மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும் தேவரை யொத்தனர் திடுக்கெனப் பீடத்து ஏறிநின் றதுகாண்! இளமையும் திறலும் ஆதிபத் தகைமையும் அமைந்ததோர் உருவம். விழிகளில் தெய்வப் பெருங்கனல் வீசிடத் திருமுடி சூழ்ந்தோர் தேசிகாத் திருப்ப தூக்கிய கரத்தில் சுடருமிழ்ந் திருந்தது கூறநா நடுங்குமோல் கொற்றக் கூர்வாள். எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி, வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர்ச் சிங்கக் கூட்டம் திகைத்திருந் தாங்கு மோனமுற் றடங்கி முடிவணங் கினரால் வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன் திருவுள நோக்கஞ் செப்புவன், தெய்வச் சேயித ழசைவுறச் சினந்தோர் எரிமலை குமுறுதல் போல்வெளிக் கொண்டன திருமொழி "வாளிதை மனிதர் மார்பிடைக் குளிப்ப விரும்புகின் றேன்யான்; தீர்கிலா விடாய்கொள் தருமத் தெய்வந் தான்பல குருதிப் பலவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை நெஞ்சினைக் கிழித்து நிலமிசை யுதிரம் வீழ்த்தித் தேவியின் விடாயினைத் தவிர்ப்ப யார்வரு கின்றீர்!" என்னலும் சீடர்கள் நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர் கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது ஆங்கிருந் தார்பல் லாயிர ருள்ளொரு வீரன்முன் வந்து விளம்புவான் இ•தே. "குருமணி! நின்னொரு கொற்றவள் கிழிப்ப விடாயறாத் தருமம் மேம்படு தெய்வத்து இரையென மாயவன் ஏற்றருள் புரிகவே!" புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம் கோயிலுள் அவனைக் குரவர்கோன் கொடுசெல, மற்றதன் நின்றொர் மடுவின்வந் தாலெனக் குருதிநீர் பாயக் குழாத்தினர் கண்டஜர் பார்மின்! சற்குரு பளீரெனக் கோயிலிஜ் வெளிப்போந் தாங்கு மேவினோர் முன்னம் முதற்பலி முடித்து முகமலர்ந் தோனாய் மின்னெனப் பாய்ந்து மீண்டுவந் துற்றனன். மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி - தூக்கிப் பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன், "மானுடர் நெஞ்சிலிவ் வாளினைப் பதிக்கச் சித்தம்நான் கொண்டேன்; தேவிதான் பின்னுமோர் பலிகேட் கின்றாள்! பக்தர்காள்! நும்முளேஇன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇக் காளியை தாகங் கழித்திட துணிவோன் எவனுளன்!" எனலும் இன்னுமோர் துணிவுடை வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன். இவனையுங் கோயிலுள் இனிதழைத் தேகி இரண்டாம் பலிமுடித் தீண்டினன் குரவன் குருதியைக் கண்டு குழாத்தினர் நடுங்கினர். இங்ஙன மீண்டுமே இயற்றிபப லியோ ரைந்து பரமனங் களித்தனன். அறத்தினைத் தமதோர் அறிவினாற் கொண்ட மட்டிலே மானிடர் மாண்பெற லாகார் அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் அவரே மெய்மையோர் முத்தரும் அவரே தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே தண்ணருட் கடலாந் தகவுயர் குரவன் கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன். அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர் ஐவரைக் கண்டபின் அவ்வியல் உடையார் எண்ணிலர் உளரெனத் துணிந்துஇன்பு எய்தினன் வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து சொர்க்கமுற் றாரெனத் தொண்டர்கொண் டிருக்கும் ஐந்துநன் மணியெனும் ஐந்துமுத் தரையும் கோயிலு ளிருந்துபே ரவைமுனர்க் கொணர்ந்தான்! ஆர்த்தனர் தொண்டர்! அருவியப் பெய்தினர்! விழிகளைத் துடைத்து மீளவும் நோக்கினர் "ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்!" எனப்பல வாழிகள் இசைத்தனர், ஆடினர். அப்போழ் தின்னருள் அவதரித் தனையான், நற்சுடர்ப் பரிதி நகைபுரிந் தாங்கு குறுநகை புரிந்து குறையறு முத்தர் ஐவர்கள் தம்மையிம் அகமுறத் தழுவி ஆசிகள் கூறி அவையினை நோக்கிக் கடல்முழக் கென்ன முழங்குவன் காணீர்! ஏகாளியும் நமது கனகநன் னாட்டுத் தேவியும் ஒன்றெனத் தேர்ந்தநல் அன்பர்காள்! நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும பலியிடச் சென்றது பாவனை மன்ற. என்கரத் தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்? ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும் நெஞ்சகச் சோதனை நிகழ்த்தினன் யானே! தாய்மணி நாட்டின் உண்மைத் தனயர் நீர் என்பது தெளிந்தேன், என்கர வாளால் அறுத்ததிங் கின்றைத் தாடுகள் காண்பீர், சோதனை வழியினுந் துணிவினைக் கண்டேன், களித்ததென் நெஞ்சம், கழிந்தன கவலைகள் குருகோ விந்தன் கொண்டதோர் தருமம் சீடர்தம் மார்க்கம்எ எனப்புகழ் சிறந்தது இன்னுமம் மார்க்கத் திருப்பவர் தம்பெயர் காலசா என்ப, காலசா எனுமொழி முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று ஐவரன் னோர்தமை அருளினன் ஆரங்யன் சமைந்தது எகாலசாஎ எனும் பெயர்ச் சங்கம் பாரத மென்ற பழம்பெரு நாட்டினர் ஆவிதேய்ந் தழித்திலர். ஆண்மையிற் குறைந்திலர். வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன் அந்நாள் முகுந்தன் அவதரித் தாங்கு ஓர் தெய்விகத் தலைவன் சீருறத் தோன்றி மண்மா சகன்ற வான்படு சொற்களால் எழுப்பிடுங் காலை, இறந்துதான் கிடக்கிலள் இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை சாதியின் மானந் தாங்கமுற் படுவளென்று உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன். ஐம்பெரும் பூதத் தகிலமே சமைத்த முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து சீடர்கள் மூலமாத் தேசுறு பாரதச் சாதியை வகுத்தனன்; தழைத்தது தருமம். கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர் நடுங்குவ ராயினர்; நகைத்தனள் சுதந்திரை. ஆயிரத் தெழுநூற் றைம்பத் தாறு விக்கிர மார்க்க னாண்டினில் வியன்புகழ்க் குருகோ விந்தன் கொற்றமர் சீடரைக் கூட்டியே தெய்வக் கொலுவொன் றமைத்தனன் காண்டற் கரிய காட்சி! கவின் திகழ் அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன் சூழ்ந்திருந் தனர் உயிர் தொண்டர்தாம் ஐவரும் தன் திருக் கரத்தால் ஆடைகள் சார்த்தி மாலைகள் சூட்டி மதிப்புற இருத்திக் கண்மணிப் போன்றார் ஐவர்மேற் கனிந்து குழைவுற வாழ்த்திக் குழாத்தினை நோக்கி, "காண்டிரோ! முதலாங் 'காலசா' என்றனன் நாடும் தருமமும் நன்கிதிற் காப்பான் அமைந்ததிச் சங்கம் அறமின்நீர் என்றான் அருகினில் ஓடிய ஆற்றின்நின் றையன் இரும்புச் சிறுகலத் தின்னீர் கொணர்ந்து வாள்முனை கொண்டு மற்றதைக் கலக்கி மந்திர மோதினன், மனத்தினை அடக்கிச் சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கிச் சபமுரைத் திட்டான், சயப்பெருந்திரு, அக் கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள். ஆற்றுநீர் தனையோ அடித்ததந் திருவாள் அயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரதச் சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி நல்லுயிர் நல்கினன், நாடெலாம் இயங்கின. தவமுடை ஐவரைத் தன்முனா நிறுத்தி மந்திர நீரை மாசறத் தெளித்து அருள்மய மாகி அவர்விழி தீண்டினன் பார்மினோ உலகீர்! பரமனங் கரத்தால் அவர்விழி தீண்டிய அக்கணத் தன்றே நாடனைத் திற்கும் நல்வழி திறந்தது! சீடர்கள னைவரும் தீட்சை இ•தடைந்தனர். ஐயன் சொல்வான் அன்பர்காள்! நீவிர் செய்திடப் பெற்ற தீட்சையின் நாமம் அமிர்தம்எ என்று அறிமின் அரும்பே றாம் இது பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் நுமக்கினித் தருமம் நுவன்றிடக் கேண்மின், ஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய மானிடரெல்லாஞ் சோதரர் மானிடர்சமத்துவ முடையார், சுதந்திரஞ் சார்ந்தவர். சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும் இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல் ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும் தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதியொன் றினையே சார்ந்ததோ ராவீர் அநீதியும் கொடுமையும் அழித்திடுஞ் சாதி இமழித்திடலறியா வன்முகச் சாதி இரும்புமுத் திரையும் இறுகிய கச்சையும் கையினில் வாளும் கழன்றிடாச் சாதி இசோதர நட்புத் தொடர்ந்திடு சாதி அரசன் இல்லாது தெய்வமே யரசா மானுடர் துணைவரா, மறமே பகையாக் குடியர சியற்றுங் கொள்கையார் சாதி அறத்தினை வெறுக்கிலீர்! மறத்தினைப் பொறுக்கிலீர், தாய்த்திரு நாட்டைச் சந்ததம் போற்றிப் புகழொடு வாழ்மின்! புகழொடு வாழ்மின்!" என்றுரைத் தையன் இன்புற வாழ்த்தினன் அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள். குருகோ விந்தக் கோமகன் நாட்டிய கொடிஉயர்ந் தசையக் குவலயம் புகழ்ந்தது ஆடியே மாய்ந்தது அரங்கசீப் ஆட்சி. ----- 43. தாதாபாய் நௌரோஜி முன்னாலில் இராமபிரான் கோதமனா       தியபுதல்வர் முறையி னீன்று பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்       தியஎமது பரத கண்ட மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்       பிறரெள்ள வீழ்ந்த காலை அன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில       மக்களவ ரடிகள் சூழ்வாம். அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்       மைந்தன், தன் அன்னை கண்ணீர் எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்       உயிர் துடைப்பேன் என்னப் போந்து, யௌவன நாள் முதற்கொடுதான்       எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும் செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி       யானுழைப்புத் தீர்த லில்லான் கல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக்       கருணையும்அக் கருணைப் போலப் பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு       நிகரின்றிப் படைத்த வீரன், வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்       எனஅதனை வெறுத்தே உண்மைச் சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றித்       தனக்குழையாத் துறவி யாவோன். மாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும்       மதியாதே வாணாள் போக்குந் தீதாவார் வரினுமவர்க் கினியசொலி       நன்குணர்த்துஞ் செவ்வி யாளன், வேதாவா யினுமவனுக் கஞ்சாமே       உண்மைநெறி விரிப்போன் எங்கள் தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்       நவுரோஜி சரணம் வாழ்க; எண்ப•தாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு       இருந்தெம்மை இனிது காக்க! பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந்       துக எமது பரதநாட்டுப் பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி       போற்புதல்வர் பிறந்து வாழ்க விண்புல்லு மீன்களென அவனன்னார்       எவ்வயினும் மிகுக மன்னோ! ---- 44. பூபேந்திர விஜயம் பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்       விவேகானந்தப் பரமன் ஞானY ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்       விண்ணவர்த முலகை யாள்ப்ர- தாபேந்திரன் கோப முறினுமதற்கு       அஞ்சியறந் தவிர்க்கி லாதான் பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்       டிற்கடிமை பூண்டு வாழ்வோன் வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங்       கிளைத்துவர மேலோர் தம்மைத் தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு       பாதகமே ததும்பி நிற்கும் பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்       அருகில்வரும் பான்மை தோன்றக் காழ்த்தமன வீரமுடன் யுகாந்திரத்தின்       நிலையினிது காட்டி நின்றான் மண்ணாளு மன்ன ரவன் றனைச் சிறைசெய்       திட்டாலும் மாந்த ரெல்லாம் கண்ணாகக் கருதியவன் புகழோதி       வாழ்த்திமனங் களிக்கின் றாரால் எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்       சிலருலகில் இருப்ப ரன்றே? விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்       இருளினது விரும்பல் போன்றே! இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட்       டிற்கிரங்கி இதயம் நைவான் ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்       ஓருயிரென் றுணர்ந்த ஞானி. அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்       பெருமையெதும் அறிகி லாதார், முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா       தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே? ----- 45. வாழ்க திலகன் நாமம்! பல்லவி வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே! வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே! சரணங்கள் நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே! நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே! ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே! எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே! (வாழ்க) கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் - நல்ல கருத்தினா லதனைச் சூழ்ந்தோர் அகழி வெட்டினான் சொல் விளக்க மென்ற தனிடைக் கோயி லாக்கினான் ஸ்வாதந் தர்யமென்ற தனிடைக் கொடியைத் தூக்கினான் (வாழ்க) துன்பமென்னும் கடலைக் கடக்குந் தோணி யவன் பெயர் சோர்வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சி யவன் பெயர் அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன்பேர் ஆண்மையென்னும் பொருளைக் காட்டும் அறிகுறி யவன்பேர். (வாழ்க) ------ 46. திலகர் முனிவர் கோன் நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்       நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர் தாம கத்து வியப்பப் பயின்றொரு       சாத்தி ரக்கடலென விளங்குவோன், மாம கட்குப் பிறப்பிட மாகமுன்       வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப் பூம கட்கு மனந்துடித் தேயிவள்       புன்மை போக்குவல் என்ற விரதமே. நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்       நீத மேயோர் உருவெனத் தோன்றினோன், வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை       மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன், துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே       தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும் அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்       அன்பொ டோதும் பெயருடை யாவரின். வீர மிக்க மராட்டியர் ஆதரம்       மேவிப் பாரத தேவி திருநுதல் ஆர வைத்த திலகமெனத் திகழ்       ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன், சேர லர்க்கு நினைக்கவுந் தீயென       நின்ற எங்கள் திலக முனிவர்கோன் சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்       சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே. ------ 47. லாஜபதி விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்       அதன்கதிர்கள் விரைந்து வந்து கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?       நினையவர் கனன்றிந் நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்       யாங்களெலாம் மறக்கொ ணாதெம் எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி       நீவளர்தற் கென்செய் வாரே ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு       கடத்தியவர்க்கு ஊறு செய்தல் அருமையில்லை; எளிதினவர் புரிந்திட்டா       ரென்றிடினும் அந்த மேலோன் பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென       நெஞ்சினுளே பெட்பிற் பேணி வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்       ஓட்டியெவர் வாழ்வ திங்கே? பேரன்பு செய்தாரில் யாவரே       பெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்? ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்       செய்ததனால் அவனுக் குற்ற கோரங்கள் சொலத் தகுமோ? பாரதநாட்       டிற்பக்தி குலவி வாழும் வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்       பலவடைதல் வியத்தற் கொன்றோ? ------ 48. லாஜபதியின் பிரலாபம் கண்ணிகள் நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே? வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? ஆசைக் குமரன் அர்ச்சுனனைப் போல்வான்றன் மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால் குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும் நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு. சிந்துவெனுந் தெய்வத் திருநதியும் மற்றதிற்சேர் ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு. ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம் வெம்புலனை வென்ற எண்ணில் வீரர்க்குந் தாய்நாடு. நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம் புல்லியரைச் செற்றாழ்ந்த புனிதப் பெருநாடு. கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு. கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும் மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு. ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார் நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவத் தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம். சீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல் ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு. ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த சீரியர் மெஞ்ஞான தயாநந்தர் திருநாடு. என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ? ஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ? என்னை நினைத்தும் இரங்குவரோ? அல்லாது பின்னைத் துயர்களிலென் பேருமறந் திட்டாரோ? தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில் கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன். எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும் தத்துபுனற் பாஞ்சாலந் தனில்வைத்தால் வாடுகிலேன். ----- 49. வ.உ.சி.க்கு வாழ்த்து வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்       மன்னனென மீண்டான் என்றே கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ       வருந்தலைஎன் கேண்மைக்கோவே! தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்       நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி, வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே       வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி! ----- பிற நாடுகள் 50. மாஜினியின் சபதம் பிரதிக்கினை பேரருட் கடவுள் திருவடி யாணை,       பிறப்பளித் தெமையெலாம் புரக்கும் தாரணி விளக்காம் என்னரு நாட்டின்       தவப்பெய ரதன்மிசை யாணை பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்       பணிக்கெனப் பலவிதத் துழன்ற வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த       விழுமியோர் திருப்பெய ராணை. ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த சீருய ரறங்களி னாணை. மாசறு மென்நற் றாயினைப் பயந்தென் வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின் ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ அத்தகை யன்பின்மீ தாணை. தீயன புரிதல் முறைதவி ருடைமை,       செம்மைதீர் அரசியல், அநீதி ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்       அரும்பகை யதன்மிசை யாணை தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய       உரிமைகள் சிறிதெனு மில்லேன், தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்       துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன். மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து       மண்டுமென் வெட்கத்தி னாணை. முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று       அச்செயல் முடித்திட வலிமை அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில்       ஆர்ந்த பேராவலி னாணை. நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்       நலனறு மடிமையின் குணத்தால். வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண்       வளர்ந்திடும் ஆசைமீ தாணை. மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்       மாண்பதன் நினைவின்மீ தாணை. மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்       வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை. பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்       புன்சிறைக் களத்திடை யழிந்தும் வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும்       மெய்குலைந் திறந்துமே படுதல் ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்       அன்னைமார் அழுங்கணீ ராணை. மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்       வகுக்கொணாத் துயர்களி னாணை. ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே       யான்செயுஞ் சபதங்கள் இவையே. கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்       கட்டளை தன்னினும் அதனைத் திடனுற நிறுவ முயலுதல் மற்றித்       தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம் உடனுறு கடமை யாகுமென் பதினும்       ஊன்றிய நம்புதல் கொண்டும் தடநில மிசையோர் சாதியை இறைவன்       சமைகெனப் பணிப்பனேல் அதுதான். சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்       தந்துள னென்பதை யறிந்தும் அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்       அன்னவர் தமக்கெனத் தாமே தமையல தெவர்கள் துணையு மில்லாது       தம்மருந் திறமையைச் செலுத்தல் சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே       சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும், கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்       கருதிடா தளித்தலுந் தானே தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு       தளர்விலாச் சிந்தனை கொளலே பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்       பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும், அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்       ஆணைக ளனைத்து முற்கொண்டே. என்னுடனொத்த தருமத்தை யேற்றார்       இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்       தத்தமா வழங்கினேன்; எங்கள் பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்       சுதந்திரம் பூண்டது வாகி இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்       குடியர சியன்றதா யிலக. இவருடன் யானும் இணங்கியே யென்றும்       இதுவலாற் பிறதொழி லிலனாய்த் தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.       சந்ததஞ் சொல்லினால், எழுத்தால், அவமறு செய்கை யதனினால் இயலும்       அளவெல்லாம் எம்மவ ரிந்த நவமுறு சபையி னொருபெருங் கருத்தை       நன்கிதன் அறிந்திடப் புரிவேன். உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம்       ஒன்றுதான் மார்க்கமென் பதுவும் செயம்நிலை யாகச் செய்திடற் கறமே       சிறந்ததோர் மார்க்கமென் பதுவும், பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்       பேணுமா றியற்றிடக் கடவேன், அயலொரு சபையி லின்றுதோ றென்றும்       அமைந்திடா திருந்திடக் கடவேன். எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்       இச்சபைத் தலைவரா யிருப்போர் தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து       தலைக்கொளற் கென்றுமே கடவேன், இங்கென தாவி மாய்ந்திடு மேனும்       இவர்பணி வெளியிடா திருப்பேன் துங்கமார் செயலாற் போதனை யாலும்       இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன். இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்       மெய்யிது, மெய்யிது; இவற்றை என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை       ஈசனார் நாசமே புரிக. அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க       அசத்தியப் பாதகஞ் சூழ்க நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து       நித்தம்யா னுழலுக மன்னோ! வேறு பேசி நின்ற பெரும்பிர திக்கினை மாசி லாது நிறைவுறும் வண்ணமே ஆசி கூறி யருளு! ஏழையேற்கு ஈசன் என்றும் இதயத் திலகியே.- ---- 51. பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து அறத்தினால் வீழ்ந்து விட்டாய்,       அன்னியன் வலியனாகி மறத்தினால் வந்து செய்த       வன்மையைப் பொறுத்தல் செய்வாய், முறத்தினால் புலியைத் தாக்க்ம்       மொய்வரைக் குறப்பெண் போலத் திறத்தினான் எளியை யாகிச்       செய்கையால் உயர்ந்து நின்றாய்! வண்மையால் வீழ்ந்து விட்டாய்!       வாரிபோற் பகைவன் சேனை திண்மையோடு அடர்க்கும் போதில்       சிந்தனை மெலித லின்றி ஒண்மைசேர் புகழே மேலென்று       உளத்திலே உறுதி கொண்டாய், உண்மைதேர் கோல நாட்டார்       உரிமையைக் காத்து நின்றாய். மானத்தால் வீழ்ந்து விட்டாய்!       மதங்ப்பிலாப் பகைவர் வேந்தன் வானத்தாற் பெருமை கொண்ட       வலிமைதான் உடைய னேனும். ஊனத்தால் உள்ள மஞ்சி       ஒதுங்கிட மனமொவ் வாமல் ஆசனத்தைச் செய்வோ மென்றே       அவன்வழி யெதிர்த்து நின்றாய்! வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!       மேல்வரை யுருளுங் காலை ஓரத்தே ஒதுங்கித் தன்னை       ஒளித்திட மனமொவ் வாமல் பாரத்தை எளிதாக் கொண்டாய்,       பாம்பினைப் புழுவே யென்றாய் நேரத்தே பகைவன் தன்னை       எநில்எலென முனைந்து நின்றாய். துணிவினால் வீழ்ந்து விட்டாய்!       தொகையிலாப் படைக ளோடும் பிணிவலர் செருக்கி னோடும்       பெரும்பகை எதிர்த்த போது பணிவது கருத மாட்டாய்,       பதுங்குதல் பயனென் றெண்ணாய் தணிவதை நினைக்க மாட்டாய்,       நில் லெனத் தடுத்தல் செய்தாய். வெருளுத லறிவென் றெண்ணாய,       விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய், சுருளலை வெள்ளம் போலத்       தொகையிலாப் படைகள் கொண்டே மருளுறு பகைவர் வேந்தன்       வலிமையாற் புகுந்த வேளை, உருளுக தலைகள் மானம்       ஓங்குகெஎன் றெதிர்த்து நின்றாய். யாருக்கே பகையென் றாலும்       யார் மிசை இவன்சென் றாலும் ஊருக்குள் எல்லை தாண்டி       உத்திர வெண்ணி டாமல், போருக்குக் கோலம் பூண்டு       புகுந்தவன் செருக்குக் காட்டை வேருக்கும் இடமில் லாமல்       வெட்டுவேன் என்று நின்றாய். வேள்வியில் வீழ்வ தெல்லாம்       வீரமும் புகழும் மிக்கு மீள்வதுண்டு டுலகிற் கென்றே       வேதங்கள் விதிக்கும் என்பர், ஆள்வினை செய்யும் போதில்,       அறத்திலே இளைத்து வீழ்ந்தார் கேள்வியுண் டுடனே மீளக்       கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல். விளக்கொளி மழுங்கிப் போக       வெயிலொளி தோன்றும் மட்டும், களக்கமா ரிருளின் மூழ்குங்       கனக மாளிகையு முண்டாம், அளக்கருந் தீதுற் றாலும்       அச்சமே யுளத்துக் கொள்ளார், துளக்கற ஓங்கி நிற்பர்,       துயருண்டோ துணிவுள் ளோர்க்கே? ----- 52. புதிய ருஷியா (ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி) மாகாளி பராசக்தி உருசியநாட்       டினிற்கடைக்கண் வைத்தாள், அங்கே, ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,       கொடுங்காலன் அலறி வீழ்ந்தான், வாகான தோள்புடைத்தார் வானமரர்,       பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர் போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,       வையகத்தீர், புதுமை காணீர்! இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்       ஜாரெனும்பே ரிசைந்த பாவி சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்       சான்றோரும்; தருமந் தன்னைத் திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்,       பொய்சூது தீமை யெல்லாம் அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த       தோங்கினவே அந்த நாட்டில். உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை,       பிணிகள் பலவுண்டு பொய்யைத் தொழுதடிமை செய்வாருக்குச் செல்வங்க       ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு,       தூக்குண்டே யிறப்ப துண்டு, முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே       ஆவிகெட முடிவ துண்டு. இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால்       வனவாசம், இவ்வா றங்கே செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே       அறமாகித் தீர்ந்த போதில் அம்மைமனங் கனிந்திட்டாள், அடிபரவி       உண்மைசொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடுநல் விழியாலே       நோக்கினாள்ஈ முடிந்தான் காலன். இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்       ஜாரரசன் இவனைச் சூழ்ந்து சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி       அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,       புயற்காற்றுங் குறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்       விறகான செய்தி போலே! குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு       மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று       உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது       அடிமையில்லை அறிக என்றார், இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான்,       கிருத யுகம் எழுக மாதோ! ----- 53. கரும்புத் தோட்டத்திலே ஹரிகாம்போதி ஜன்யம் ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு பல்லவி கரும்புத் தோட்டத்திலே - ஆ! கரும்புத் தோட்டத்திலே சரணங்கள் கரும்புத் தோட்டத்திலே - அவர்       கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே! ஹிந்து       மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய் சுருங்குகின்றனரே - அவர்       துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு மருந்திதற் கிலையோ? - செக்கு       மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு       பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது எண்ணம் இரங்காதோ? - அந்த       ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும் மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு       மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக்       காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) நாட்டை நினைப்பாரோ? - எந்த       நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ? - அவர்       விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்       கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரையாயோ? - அவர்       விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே) நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு       நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப் பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்       பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு தஞ்சமு மில்லாதே - அவர்       சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில் மிஞ்ச விடலாமோ? - ஹே       வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே) தேசிய கீதங்கள் முற்றிற்று ------------- This webpage was last revised on 16 September 2021. Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).